திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை குரும்பபட்டி அண்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரன் (32) என்பவர் பால் வியாபாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், பெரும் பணத்தை இழந்துள்ளார். இழந்த தொகையை மீட்டுப்பெற முயற்சிக்கும் போது, கடனும் வாங்கி விளையாடியதால், சுமார் ரூ.2 லட்சம் வரை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலால், மகேந்திரன் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார்.

அதற்குப் பிறகு வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று செந்துறை அருகே உள்ள பாலக்குட்டு மலை உச்சியில் உள்ள ஒரு மரத்தில், தூக்கில் அழுகிய நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பரிசோதித்தபோது, அது மகேந்திரன் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.