
கோயிலின் பெயரால் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி, ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் 3 நாட்கள் தங்கி நவராத்திரி விழா நடத்த அனுமதி வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி பல்வேறு கேள்விகளையும், கண்டனங்களையும் எழுப்பி இருக்கிறார். குறிப்பாக கோவில் பெயரால் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள் எனவும், சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை எவ்வாறு அனுமதி அளித்திருக்கிறது? வனத்தில் உள்ள கோயில்களில் என்ன நடக்கிறது என நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும் என்று நீதிபதி இந்த கேள்விகளை எழுப்பி உள்ளார்.
சதுரகிரி மலைப்பகுதி என்பது பாதுகாக்கப்பட்ட புலிகள் வனப்பகுதி, அவ்வாறு உள்ள சூழலில் 3 நாட்கள் எவ்வாறு தங்கி இந்த பூஜைகளை நடத்த முடியும் என ஏற்கனவே இந்த வழக்கு குறித்து கேள்விகளை எழுப்பியிருந்த நீதிபதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பதிலளிக்க இன்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தான் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் நடந்த போது ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலர் திலீப் குமார் நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் மலைப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட சட்டவிரோத கோயில்கள் இருக்கிறது. சதுரகிரி மலைப்பகுதியில் மட்டும் 18 மடங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, கோயிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு பொறுப்பே இல்லாமல் வனத்தை குப்பைகளாக்கி பொதுமக்கள் செல்கிறார்கள். எத்தனை பேர் வனத்தில் உள்ள குப்பைகளை இதுவரை அகற்றி இருக்கிறார்கள்? கோயிலுக்கு செல்ல அனுமதி வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்? நீதிமன்றம் அனுமதி கொடுத்தால் வனத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை மலை போல கொட்டி விட்டு போகிறார்கள். இதுதான் வாடிக்கையாக நடக்கிறது என கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.
மேலும் எத்தனை கோயில் நிர்வாகிகள், தர்ம கர்த்தாக்கள், பொதுமக்கள் வனத்தில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு அங்கே தூய்மை பணி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் சட்டவிரோத கட்டடங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை எப்படி அனுமதி அளித்தது என தெரியவில்லை. இந்த வழக்கில் மதுரை, விருதுநகர் காவல் கண்காணிப்பாளர்களை எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டு, இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலைத்துறை நாளை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்..