
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை அங்கு 300 மில்லி மீட்டர் மழை என்று செய்திகளில் கூறி கேட்டு இருப்போம். அவை எவ்வாறு அளவிடப்படுகிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். “Rain gauge” என்று கூறப்படும் மழை மானி கருவியை, பயன்படுத்தித்தான் மழையை அளந்து, ‘இத்தனை மி.மீ. மழை பெய்தது’ என்று சொல்கிறார்கள்.
ஒரு சதுர மீட்டருக்கு, 24 மணிநேர கால அளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அதன் மூலம் அறிவார்கள். அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கிடுவார்கள். ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1 லிட்டர் என்பதற்குச் சமம்.