
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் தரம்பூரி அரசு தொடக்கப் பள்ளியில், மர்ம நபர்கள் குடிநீர் தொட்டியில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
தொடர்ச்சியான விடுமுறைகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 30 மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வந்த போது மதிய உணவுக்காக பாத்திரங்களை கழுவ முயன்ற ஊழியர்கள் குழாயில் இருந்து வரும் தண்ணீரில் துர்நாற்றம் இருப்பதை கவனித்தனர்.
உடனே குடிநீர் தொட்டியை சோதனை செய்தபோது அதிலும் வெப்பமும், தண்ணீர் நிறம் மாறியும் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் உடனடியாக மாணவர்களை எச்சரித்து, போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற இச்சோடா போலீசார், நிபுணர்களை அழைத்து தண்ணீரை சோதனை செய்ததில், அதில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு முன் திரண்டு கண்டனப் போராட்டம் நடத்தியுள்ளனர். மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய இந்த கொலை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.