நீலகிரி: குன்னூரைச் சேர்ந்த 16 வயது மாணவி, இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 16 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டு, மூன்று பவுன் தங்கக் கம்மலை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியின் தாய் வேலைக்காக வெளியூரில் இருப்பதால், தந்தையின் பராமரிப்பில் கல்வி பயின்று வந்தார். செல்போனில் அதிக நேரம் செலவிடும் மாணவி, இன்ஸ்டாகிராமில் ஒரு சிறுவனுடன் நட்பு ஏற்படுத்தி, பின்னர் அது காதலாக மாறியது.

தந்தை இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் சந்தித்து, மாணவியின் வீட்டில் நேரம் கழித்ததாக கூறப்படுகிறது. சிறுவன் திருமண உறுதியுடன் நெருக்கமாக பழகி, அந்த நெருக்கத்தை வீடியோவாக எடுத்துக்கொண்டு வைத்திருந்தான்.

பின்னர், பணம் தேவைப்படுகிறது எனக் கூறி, மாணவியின் காதில் இருந்த மூன்று பவுன் தங்கக் கம்மலை வாங்கிச் சென்றான். அதனை அடமானம் வைத்து கிடைத்த பணத்தில் ஆடம்பரமாக செலவழித்துள்ளார்.

நாள்கள் கழிந்தபின்பு மாணவி கம்மலை திரும்பக் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதனையடுத்து சிறுவன், முந்தைய உல்லாச வீடியோக்களை காட்டி மிரட்டியுள்ளார். “என்னுடன் மீண்டும் உறவில் ஈடுபடு, இல்லையெனில் வீடியோவை வெளியிடுவேன்” என பலமுறை வற்புறுத்தியதாக தெரியவந்தது.

இது மாணவிக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதே நேரத்தில், வெளியூரில் இருந்த தாயார் வீட்டிற்கு வந்த போது, மாணவியின் கம்மல் இல்லாமையை கவனித்து கேள்வி எழுப்பினார்.

மாணவி உண்மையை கூறியதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரின் அடிப்படையில் சிறுவனுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குன்னூரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் நட்புகள், தவறான பாதையில் மாணவிகள் சிக்கக்கூடிய சூழ்நிலைகளை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.