
சென்னை கேகே நகர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபரை காதலித்துள்ளார். இவர்களின் காதலை மாணவியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே வேறு மாப்பிள்ளை பார்த்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் நேற்று முன்தினம் மாலை கேகே நகரில் உள்ள மாணவியின் வீட்டில் நிச்சயதார்த்த விழா நடந்துள்ளது. இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவி அதன் பிறகு இரவு விருந்து நிகழ்ச்சி நடந்த போது தன்னுடைய காதலனுக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அவரும் தன்னுடைய ஐந்து நண்பர்களோடு மாணவியின் வீட்டிற்கு வந்த நிலையில், உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் எனக்கு இவர்தான் கணவர், நான் அவரோடு தான் போகப் போகிறேன் முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள் என்று கூறியுள்ளார். பிறகு காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய அவரை உறவினர்கள் சிலர் தடுத்த நிலையில் உடன் வந்த நண்பர்கள் கையில் இருந்த கத்தியை கொண்டு அவர்களை மிரட்டி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தனது காதலனை அந்தப் பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் தனக்கு 21 வயது ஆகிறது என்பதால் சட்டப்படி நான் செய்து கொண்ட திருமணத்தை ஏற்றுக் கொண்டு என்னை ஆசீர்வதியுங்கள் என்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து மணமக்களை வாழ்த்திய போலீசார் மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து சமாதானம் பேசி உடன் அனுப்பி வைத்தனர். துணிச்சலாக வீட்டை விட்டு வெளியேறி காதலனை கைபிடித்த மாணவிக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.