
கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மதுபானம் வாங்குவதற்காக பலர் வரிசையில் காத்திருந்த நிலையில் ஒரு சிறுமியும் நின்றுள்ளார். சம்பவ நாளில் இரவு நேரத்தில் அந்த சிறுமி வரிசையில் காத்து நின்று மதுபானம் வாங்கி சென்றார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் சிறுமியை வெளியேறும்படி அவர்கள் கூறினர். ஆனால் அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் சிறுமியின் பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட அது மிகவும் வைரலானது. இந்த வீடியோ வைரலான நிலையில் காவல்துறையினர் தாமாக முன்வந்து விசாரித்ததில் அந்த சிறுமியின் தந்தை மது வாங்குவதற்காக அனுப்பியது தெரிய வந்தது. இந்த தொடர்பாக அந்த சிறுமியின் தந்தைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏதோ கடைக்கு மிட்டாய் வாங்க சென்றது போன்று குழந்தையை மதுக்கடைக்கு தந்தை அனுப்பியது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.