சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை வீட்டிற்க்கான மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும் விஜயகுமார் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கான மின் கட்டணம் 2.10 லட்சம் ரூபாய் கட்டுமாறு மின்வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்காக விஜயகுமார் தனது நண்பர்களிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால் யாரும் பணம் கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.