திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அந்த வகையில் விருதுநகரில் இருந்து ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்தார்.

இந்த நிலையில் ஜெயராஜ் ஏரி சாலைக்கு சென்று தனது மகன் ஜோயல் கிப்சனை(9) குதிரை மீது அமர வைத்து சவாரி செய்ய வைத்தார். அந்த பகுதியில் வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியதாக தெரிகிறது.

இதனால் குதிரை மிரண்டு ஓடிய போது சிறுவன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். அப்போது சிறுவன் கயிற்றை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் சுமார் 50 அடி தூரத்திற்கு குதிரை கிப்சனை இழுத்து சென்றது.

இதனால் படுகாயமடைந்த கிப்சனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு கிப்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கொடைக்கானல் ஏரி சாலையில் 20 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது. அதிக ஒளி எழுப்பும் ஹாரனை உபயோகப்படுத்த கூடாது. சுற்றுலா பயணிகள் அதிக அளவு கூடும் இடமாக எரிசாலை உள்ளது.

அந்த பகுதியை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.