ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கியது. இந்தத் தாக்குதல் தொடர்பான பல வீடியோக்கள் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது மற்றொரு அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

தற்போது வைரலாகும் வீடியோவில், பஹல்காமின் “மினி சுவிட்சர்லாந்து” என அழைக்கப்படும் இடத்தில் ஒரு சுற்றுலாப் பயணி ஜிப்லைன் சவாரி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆரம்பத்தில், சுற்றுலாப் பயணி மகிழ்ச்சியுடன் தன் பயண அனுபவங்களை வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன.
பயணி துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்ததை தொடக்கத்தில் உணராமல் தொடர்ந்து வீடியோ பதிவு செய்தார். பின்னர் சூழ்நிலை மோசமானதை உணர்ந்ததும், அப்பகுதியில் மக்கள் உயிர்காப்பிற்காக ஓடுவதும், சிலர் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம் நடந்த 6 நாட்களுக்குப் பிறகு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. வீடியோவில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் சத்தங்கள் தெளிவாகக் கேட்கப்படுகின்றன. மக்கள் தங்களுடைய உயிரைக் காப்பாற்ற ஓடுவதும், சிலர் படுகாயம் அடைந்து விழுவதும் காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவில் பதிவான சுற்றுலாப் பயணியின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பலரும் தங்கள் வருத்தத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதத்தின் மிருகத்தனத்தைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாதுகாப்புப் பிரிவுகள் தற்போது இந்த வீடியோவை ஆராய்ந்து, சம்பவம் தொடர்பான தீவிர  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.