திருப்பத்தூர் மாவட்டம் மண்டலபாடி பகுதியில் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கனகா(65). இவரது மகன் ஆறுமுகம், மருமகள் வசந்தி ஆகியோர் அருகில் இருக்கும் மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு மர்ம நபர் மூதாட்டி வீட்டு கதவை தட்டியுள்ளார். அப்போது கனகா கதவை திறந்து பார்த்தார். உடனே மர்ம நபர் கனகாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி முகத்தை துணியால் மூடி கட்டையால் சரமாரியாக அடித்தார்.

அப்போது கனகா கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம நபர் கனகா அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து கனகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். போலீசாருக்கு கனகாவின் மருமகள் வசந்தி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அடிக்கடி மாமியார் மருமகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் வசந்தி தனது மாமியாரை பழிவாங்க வேண்டும் என நினைத்து தனது மாமன் மகனான மைக்கேல் ராஜ்(21) என்பவரிடம் விஷயத்தை கூறினார். அவர் நள்ளிரவு நேரம் கனகாவின் வீட்டிற்கு வந்து மிளகாய் பொடி தூவி கட்டையால் தாக்கி நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

இதனால் போலீசார் மைக்கேல் ராஜை கைது செய்து அவரிடமிருந்த தங்க நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் வசந்தி மற்றும் மைக்கேல் ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.