
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பெருமாள் (58) என்பவர் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் சேர்த்து கவனிக்கிறார். இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 7 மாணவிகளுக்கு பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உட்பட போலீசாரும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தியதோடு அவர்களுடைய வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரிகள் திருமயம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே ஆசிரியரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டது. மேலும் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அதிகரித்து வரும் நிலையில் ஆசிரியர்களே இப்படி செய்வது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று கடலூர் மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தமிழ் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்