புதுச்சேரியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் திடீரென மாயமாகினர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போன நிலையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவிகளை தேடிய நிலையில் அன்றைய தினம் இரவே அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து விட்டனர். அப்போது அவர்கள் இருவரும் சோர்வான நிலையில் இருந்ததால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ‌

இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மாணவிகள் இருவரையும் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது மாணவிகள் இருவரையும் புஷ்பராஜ் என்ற 25 வயது வாலிபரும், மணிமாறன் என்ற 27 வயது வாலிபரும் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளனர். அதை நம்பி மாணவிகளும் அவர்களுடன் பழகி வந்த நிலையில் கடந்த 2-ம் தேதி வாலிபர்கள் இருவரும் மாணவிகளை தனியாக ஒரு கடற்கரைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பத்துக்கும் மேற்பட்டோர் அந்த மாணவிகள் இருவர்களிடமும் தனித்தனியாக பழகி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மணிமாறன் மற்றும் ராஜு ஆகியோரை கைது செய்தனர். இவர்களை நேற்று கைது செய்த நிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதோடு மாணவிகளை பலாத்காரம் செய்த நான்கு பேரை பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இதே பகுதியில் கடந்த வருடம் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அதே பகுதியில் தற்போது இரண்டு மாணவிகளை பலர் பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.