உள்நாட்டு யுத்தத்திற்கு இந்துக்களை வம்பு இழுப்பதற்காக நவாஸ் கனி ஆடு, கோழியோடு மேலே போகிறார் என்று ஹெச் ராஜா கூறியுள்ளார்.

சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி திருவிழா நடத்த இருப்பதாக தகவல் வெளியானது தமிழக முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இந்து முன்னணி அமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் மத பிரச்சினை உருவாகாமல் தடுக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இந்நிலையில் ஹெச். ராஜ பேசியுள்ளதாவது, ” உள்நாட்டு யுத்தத்திற்கு இந்துக்களை வம்பு இழுப்பதற்காக நவாஸ் கனி ஆடு, கோழியோடு மேலே போகிறார். ஆகவே இந்துக்கள் என்ற முறையில் இப்போதே கிள்ளி எறியாவிட்டால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது வந்துவிடும்.  அயோத்தி மாதிரி இங்கு ஆகக்கூடாது என்று தடை பண்ணினார்களா? அயோத்தியில் தான் முருகப்பெருமானுடைய முதல் படை வீடே தொடங்குகிறது.  இந்து விரோத அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.  இதற்கெல்லாம் 2026 இல் முகூர்த்தம் குறிச்சாச்சு” என்று பேசியுள்ளார்.