
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் களப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார். அவர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை கலந்து கொள்ளும் நிலையில் அதற்கு அடுத்த நாள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மார்க்கெட் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பின்னர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது போலீசார் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்புக்காக இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பரப்பளவிற்கு உட்பட்டு ட்ரோன்கள் பறக்க கூடாது. இதேபோன்று நெல்லை மாநகர பகுதிகளிலும் இன்று காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.