அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் என்பது ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் இருந்தனர். முதலில் முதல்வராக பொறுப்பேற்ற ஓ பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்த நிலையில் பின்னர் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் காரணமாக ஓ பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டார்.

இது தொடர்பான சட்ட சிக்கல்கள் முடிவடைந்த நிலையில் கோர்ட் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என்பது செல்லும் என்றது. இருப்பினும் ஓ பன்னீர்செல்வம் அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்றும் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டும் தான் திமுகவை வீழ்த்தி வெற்றி பெற முடியும் என்றும் கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் மீண்டும் ஒற்றுமை என்ற பேச்சுக்கு இடமில்லை என்று கூறுகிறார். குறிப்பாக நேற்று அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் தான். அதிமுக மீண்டும் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

இதற்கு தற்போது ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர். அதில் அமர்த்தியவர். அதில் தொடர துணை புரிந்தவர் என அனைவரது முதுகிலும் குத்திய துரோகியை பொதுமக்கள் நம்பவில்லை என்பது தேர்தல் தோல்வி மூலம் தெளிவாக காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அதிமுகவால் ஒருபோது ஆட்சி அமைக்க முடியாது. வெற்றி என்பது எட்டாக்கனியாக அமைந்து விடும் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.