
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் மருத்துவர் சபா, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மூக்கில் நீர் வழியும் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். சிந்து மாகாணம் ரஹீம்யார் கான் நகரத்தைச் சேர்ந்த இவருக்கு, அங்கு முன்பே ஒரு அறுவை சிகிச்சை செய்தும் பிரச்சனை தொடர்ந்தது. மேலும் சபாவுக்கு தொடர்ச்சியான நீர் வெளியீட்டால் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவரின் பரிந்துரையின் பேரில் திருச்சியில் உள்ள தில்லைநகர் ராயல் போர்ல் மருத்துவமனைக்கு வந்தார்.
இங்கு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜானகிராமன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சபாவை பரிசோதித்தபோது, மூளையைச் சுற்றியிருக்கும் திரவம், அதீத அழுத்தம் காரணமாக மூக்கின் வழியே வெளியேறுவதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து நரம்பியல் நிபுணர் டாக்டர் விஜயகுமார் மற்றும் டாக்டர் ஜானகிராமன் இணைந்து, சிறப்பு நவீன அறுவை சிகிச்சை மூலம் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அளித்தனர்.
இது தொடர்பாக டாக்டர் ஜானகிராமன் கூறும்போது, “மூக்கில் நீர் வழிதல் தொடர்ந்தால், அது மூளைக்காய்ச்சலை உருவாக்கி, ஒரு கட்டத்தில் கோமா நிலைக்கும் காரணமாக மாறலாம். இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால் மீட்க முடியும்,” என்றார். தற்போது மருத்துவர் சபா நலமாக இருந்து விரைவில் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.