இந்தியாவின் மிக நீளமான மற்றும் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையிலிருந்து கோவளம் வரை உள்ள கடற்கரை பகுதிகளுக்கு நீலக் கொடி தகுதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு இப்பகுதிக்கு நீல கொடி தகுதியை பெறுவதற்கு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளை பொதுமக்கள் எளிதாக அணுகும் படி பாதுகாப்புடன் மேம்படுத்துவதே ஆகும்.

இந்தியாவில் 10 நீலக் கொடி கடற்கரைகள் அமைந்துள்ள நிலையில், கோவளம் கடற்கரைக்கு ஏற்கனவே நீல கொடி தகுதி இருக்கிறது. இந்த திட்டத்தின்படி சென்னை மெரினாவில் இருந்து கோவளம் வரை உள்ள 20 கடற்கரைகள் மேம்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 100 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த செயல்பாட்டு திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் 22 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் கடற்கரைகள் இணைக்கப்படும். மேலும் இந்த திட்டம் வெற்றியடைந்து விட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.