
உத்திரபிரதேசம் மாநிலம் ராமதாஸ்பூர் கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது மெஹந்தி போடுவதற்காக ஆர்டிஸ்ட்டான அக்கா- தங்கை இருவர் வந்திருந்தனர்.
மருதாணி வைத்த பிறகு அவர்கள் மணப்பெண் அலங்காரத்திற்கு உதவி செய்தனர். நள்ளிரவு நேரமானதால் அக்கா தங்கை இருவரும் வீட்டிற்கு எப்படி செல்வது என தெரியாமல் யோசித்தனர். அப்போது அதே திருமண வீட்டைச் சேர்ந்த மூன்று பேர் காரில் அழைத்துச் செல்கிறோம் என கூறியுள்ளனர்.
இதனை நம்பி சகோதரிகள் இருவரும் காரில் ஏறினர். அப்போது காரில் இருந்த விகாஸ், அஜய், ஆதர்ஷ் ஆகிய 3 பேரும் சகோதரிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தனர். இதனால் அந்த பெண்கள் அலறி சத்தம் போட்டனர்.
அவர்களது வாயை பொத்தி 3 வாலிபர்களும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அக்கா தங்கை இருவரும் காரில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்தனர்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அக்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கை படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த தங்கையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மற்றொரு பெண்ணின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்த நிலையில் மற்ற இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.