
தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான ஸ்டாலின் தன்னை மாணவிகள் அப்பா என்று அழைப்பதாக சமீபத்தில் நெகிழச்சியுடன் தெரிவித்திருந்தார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்து பேசியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் திமுகவின் ஆட்சியில் இன்று பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிகளுக்கு அனுப்ப முடியவில்லை. மழலையர் பள்ளிகளுக்கு கூட பெண் குழந்தைகளை அனுப்ப பயமாகத்தான் உள்ளது.
தினமும் பேப்பரை எடுத்தால் எது வருகிறதோ இல்லையோ பாலியல் வன்கொடுமைகள் குறித்த சம்பவங்கள் செய்தித்தாள்களில் தினமும் இடம்பெற்று விடுகிறது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் தமிழகத்தில் திமுக ஆட்சி எந்த அளவுக்கு உள்ளது என்று. யாரை அப்பா என்று அழைக்கிறார்கள்? மானம் கெட்ட தனமாக உள்ளது. நேற்று பிறந்த குழந்தை முதல் மூதாட்டி வரை அனைவரையும் அம்மா என்று கூப்பிடுவோம். தாய்மார்கள் அனைவரையும் அம்மா என்று அழைப்பது வழக்கம் தான்.
அது தமிழ்நாட்டின் கலாச்சாரம். யாருக்கு யார் அப்பா? மற்றொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே இங்கு வேறு தான். சூடு, சுரணை, மானமுள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்கவே மாட்டார்கள். அதை நீ சொல்லக்கூடாது மக்கள் தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி என் மீது வழக்கு போடுவார்கள். பரவாயில்லை போட்டுக் கொள்ளுங்கள். செல்போனில் படம் பார்ப்பதும் செல்பி எடுப்பதும் தான் தமிழக முதல்வர் ஸ்டாலினின் வேலையா என்று சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார்.