
காங்கிரஸ் கட்சியின் எம் பி ராகுல் காந்தி கடந்த ஜூலை 26 ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூருக்கு சென்றிருந்தார். அங்கு சாலை ஓரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம் சேட் என்பவர் தனது தொழிலை ஆர்வமாக செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராகுல் காந்தி அவரிடம் சென்று பேச்சு கொடுத்தார். அந்த சமயத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி தான் 40 ஆண்டுகளாக செருப்பு தைத்து வருவதாகவும், இதில் வரும் குறைந்த வருமானத்தை வைத்து தான் பிழைப்பை நடத்தி வருவதாகவும் கூறினார்.
அதோடு சிறுவயதில் இருந்தே வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், என்னுடைய வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியவில்லை என்றார். அதனைக் கேட்ட ராகுல் காந்தி தங்களின் நிலை மாறும் , கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறினார். அதன் பின் ராகுல் காந்தி ராம் சேட்டிடம் “நீங்கள் செருப்பு தைப்பதை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கேட்டார். அதற்கு அந்த தொழிலாளி அவர் செய்வதை நுணுக்கமாக சொல்லிக் கொடுத்தார்.
அதன் பிறகு அவ்விடத்தை விட்டு சென்ற ராகுல் காந்தி செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவும் விதமாக புதிய தையல் மிஷினை அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளிவந்த நிலையில் ராம்சேட் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி சரி செய்த செருப்பை பலரும் ராம் சேட்டிடம் சென்று பேரம் பேசினார்கள். ஆனால் ராம் சேட் பல லட்சம் கொடுத்தாலும் நான் அதை கொடுக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார்.அதோடு “நான் வாழும் வரை அவரை பிரேம் செய்து கண் முன்னே வைத்திருப்பேன்” என்று கூறினார்.