ராஜாஜி அரங்கில் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (நிமோனியா) காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 06:10 மணிக்கு காலமானார்.

இதையடுத்து சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து விஜயகாந்த் உடல் வடபழனி வழியாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்படுள்ளது. மேலும் சென்னையில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நாளை மாலை 04:45 மணிக்கு விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் அவர்களுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் டி. ராஜேந்திரன், நடிகர் கவுண்டமணி, கவிஞர் வைரமுத்து, மன்சூர் அலிகான், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், அர்ஜுன், விஜய் சேதுபதி, ஷாம், விமல், நடிகை அபிராமி, கோவை சரளா உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேபோல விஜயகாந்த் அவர்களுக்கு திருநாவுக்கரசர், முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், அமைச்சர் உதயநிதி, துரை வைகோ, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பின் பேட்டியளித்த அண்ணாமலை, அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர் விஜயகாந்த். ராஜாஜி அரங்கில் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரக்கூடிய தொண்டர்கள், ரசிகர்கள், அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடலை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பாஜக கட்சி பிரமுகர் நயினார் நாகேந்திரன், கரு நாகராஜன் உள்ளிட்டவர்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.