கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சரவணக்குமார் (42) கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமாருக்கு (43) ரூ.4 கோடி அளித்து முதலீடு செய்தார். ஆனால், ஜெயக்குமார் வட்டி தரவில்லை. இதனால் சரவணக்குமார் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பணத்தை திருப்பி தருமாறு  கேட்டார்.

ஆனால் ஜெயக்குமார் ரூ.2.5 கோடி மட்டுமே திருப்பித் கொடுத்துள்ளார். மீதம் உள்ள ரூ.1.5 கோடியை திருப்பத் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால், சரவணக்குமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர்.

விசாரணையின் போது, ஜெயக்குமார் ரூ.1.5 கோடி பணத்தை திருப்பி கொடுத்ததாக போலியான ஆவணம் ஒன்றை போலீசாரிடம் சமர்ப்பித்தது தெரியவந்தது. இதனால், அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை நேற்று கைது செய்தனர்.