கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பூஜாரஹள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு கார்த்திக் என்ற 21 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருடைய மனைவி கர்ப்பமானார். கடந்த 8 நாட்களுக்கு முன்பாக தான் இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது. இதில் கார்த்திக்கிற்கு அந்த கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் வெங்கடரெட்டி உட்பட 5 நண்பர்கள் இருந்தனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து நேற்று முன்தினம் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கார்த்திக் தன்னுடைய நண்பர்களிடம் ஒரு சவால் விடுத்தார். அதாவது மதுவில் தண்ணீர் கலக்காமல் குடிப்பேன் என்றும் கிட்டதட்ட 5 லிட்டர் வரை தன்னால் குடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். அவருடைய சவாலை நண்பர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் 5 லிட்டர் மதுபானத்தை தண்ணீர் கலக்காமல் குடித்தால் 10 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக கூறியுள்ளனர். அதன்படி கார்த்திக் மதுவை குடித்த நிலையில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. உடனடியாக அவர் தன் நண்பர்களிடம் மருத்துவமனைக்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

நண்பர்களும் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதைக் கேட்டு கார்த்திக்கின் மனைவி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். குழந்தை பிறந்து எட்டு நாட்கள் ஆகும் நிலையில் தன்னுடைய கணவனை இழந்து அந்தப் பெண் வேதனையில் தவிக்கிறார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.