
பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்பவர், வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் அரிய நாய் இனங்களை வாங்கியதாக கூறி வந்தார். சமீபத்தில் கூட 50 கோடிக்கு ஒரு வெளிநாட்டு வகை நாயை வாங்கியதாகவும் திரையுலக பிரபலங்களை விட தான்தான் அதிகமாக சம்பாதிப்பதாகவும் கூறினார். இவர் பெங்களூருவின் பன்னேர்கட்டா சாலையில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது சொத்துகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல புகார்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்ததையடுத்து, நேற்று அவரது வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அவர் கூறிய அனைத்து தகவல்களும் பொய்யாக இருப்பது அம்பலமானது.
சோதனையின் போது, சதீஷிடம் உள்ள நாய்கள் அனைத்தும் உள்ளூர் இனங்களைச் சேர்ந்தவை என்றும், அவற்றை வெளிநாட்டு நாய்களாக மாற்றி மக்களை ஏமாற்றி வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இவர் நாய்களை வாடகைக்கு எடுத்து, அதனை ஒரு வெளிநாட்டு நாய்கள் போன்று சித்தரித்து சமூக வலைதளங்களில் பொய் பிம்பத்தை உருவாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய இந்த செயல், பலரை ஏமாற்றி, பண மோசடியில் ஈடுபட முனையப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது, சதீஷ் மீது அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே அவர் யாரையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார், நாய்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட காலகட்டங்கள், மற்றும் இதன் மூலம் பெற்ற வருவாய்கள் குறித்து ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மோசடி வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.