தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் குட்பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது. இதில் இசைஞானி இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்காக அவர் 5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியான நிலையில் பின்னர் அதனை படக்குழு மறுத்ததோடு முறையாக அனுமதி பெற்று தான் அந்த பாடலை படத்தில் பயன்படுத்தினோம் என்று கூறியது.

சமீபகாலமாக இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகிறார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் தற்போது இது பற்றி இயக்குனரும் இசைஞானி இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் பேசியுள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, ரூ.7 கோடி சம்பளம் கொடுத்து இசையமைப்பாளரை வைத்துள்ள நிலையில் அவருடைய பாடலுக்கு கைத்தட்டல் விழவில்லை. எங்கள் பாடலுக்கு தான் கைத்தட்டல் விழுகிறது. எங்கள் பாட்டை போட்டுவிட்டு நீங்கள் ஆடினால் என்ன அர்த்தம். கண்டிப்பாக அதற்கு எங்களுக்கும் லாபம் வேண்டும் அப்படித்தானே. 7 கோடி சம்பளம் வாங்கியவர் பாடல் ஹிட் ஆகாத நிலையில் எங்கள் பாடல் ஹிட்டாவதால் கண்டிப்பாக எங்களுக்கு அதில் பலன் வேண்டும்.

எங்களிடம் முறையாக அனுமதி கேட்டு இருந்தால் கண்டிப்பாக அண்ணன் இலவசமாகவே கொடுத்திருப்பார். ஆனால் கேட்காமல் பாடலை பயன்படுத்துவதால் தான் அண்ணனுக்கு கோபம் வருகிறது. அஜித் படம் அதெல்லாம் ஒன்னும் இல்லை எங்கள் பாடல் அவ்வளவுதான். எங்கள் பாட்டு தான் ஜெயிக்க வைத்துள்ளது. மேலும் அதனை உரிமையாக கேட்டிருந்தால் நாங்கள் கண்டிப்பாக சந்தோஷமாக கொடுத்திருப்போம் என்றார்.