பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில், நோட் கும்பல், என்றழைக்கப்படும் மோசடி கும்பல் ஒன்று டிரைவரை ஏமாற்றி ரூ.20 லட்சம் பணத்தை அபேஸ் செய்துள்ளது.

இந்த சம்பவம், ஷாஸ்திரி நகரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா பவன் அருகே நடந்துள்ளது. அங்கு தனது குழுவினருடன் வந்த ஒப்பந்ததாரர், ஒரு கட்டிடத்திற்குள் சென்றிருந்தபோது, காரில் அதிக தொகையான பணத்தை வைத்து டிரைவரை பார்த்து கொள்ளும்படி விட்டுச் சென்றார்.

அப்போது அங்கு வந்த நோட் கும்பல் உறுப்பினர் ஒருவர், டிரைவரிடம் அருகில் 10 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடப்பதாகக் கூற, பணத்தின் பேராசையில், டிரைவர் காரை விட்டு இறங்கி நோட்டுகளை எடுக்கச் சென்றார். அப்போது, கும்பல் காரில் ரூ 20,00,000 இருந்த பணப் பையை திருடிச் சென்றுவிட்டது.

பணம் திருடப்பட்டதை கண்டுபிடித்த டிரைவர் உடனடியாக தனது முதலாளியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறினார். பின்னர், அவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளிக்க, அதிகாரிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.