தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி-செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். எனவே செல்ல தாய் வீட்டில் தனிமையில் இருந்திருக்கிறார்.

அப்போது இவரது மகன்கள் செல்லத்தாயிடம் பேசுவதற்காக மொபைல் மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது 2 நாட்களாக தனது தாய் பதிலளிக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதனை கேட்டு செல்லத்தாயின் வீட்டின் அருகே சென்று பார்த்த பக்கத்து வீட்டினர் வீட்டில் துர்நாற்றம் வருவதை அறிந்து போடி தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது கைகள் கட்டப்பட்ட நிலையில் செல்ல தாய் இறந்து கிடந்தார். இதனை கண்ட காவல்துறையினர் செல்லத்தாயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய்கள் உதவியுடன் கைரேகை நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.