
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் ரேஷன் கடைகளில் கடந்த 6 மாதங்களாக துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் கடந்த 3 மாதங்களாக பெரும்பாலான பொதுமக்களுக்கு துவரம் பருப்பு சரிவர கிடைக்கவில்லை எனவும் இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தீபாவளி பண்டிகையில் துவரம் பருப்புக்கு பிரச்சனை இல்லாத அளவுக்கு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த அறிக்கையை தொடர்ந்து தற்போது அமைச்சர் சக்ராபாணி ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையின் போது பருப்பு மற்றும் பாமாயில் போன்றவைகள் தடையின்றி வழங்கப்படும். அக்டோபர் மாதத்திற்கு 20,751 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த 15ஆம் தேதி தான் 9,461 மெட்ரிக் டன் பருப்பு பொது மக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 20408000 பாமாயில் ஒதுக்கப்பட்ட நிலையில் இதில் 97,83,000 பாமாயில் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு விட்டது. தீபாவளியை முன்னிட்டு எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் பொதுமக்களுக்கு பருப்பு மற்றும் பாமாயில் போன்றவைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் பருப்பு வினியோகம் தொடர்பான என்னுடைய அறிக்கையை படிக்காமல் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று அமைச்சர் சக்கராபாணி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.