
தமிழ்நாட்டில் பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ஏப்ரல் மாதத்திற்கான மக்கள் குறைதீர் முகாம் 2025 ஏப்ரல் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில், பொதுவிநியோகத் திட்டம் சார்ந்த பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.
இந்த முகாம்களில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் போன்ற சேவைகள் செய்து கொள்ளலாம். மேலும், நியாயவிலைக் கடைகளில் பொருள் பெற இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொதுவிநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் சந்தைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார்கள் இருந்தால், அவற்றை இம்முகாமில் தெரிவித்து உடனடி தீர்வு பெற பொதுமக்கள் பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.