
ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டியில் அமெரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்றும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்கா அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சூப்பர் ஓவர் வரை சென்றும் மோசமான முறையில் இப்படி ஆட்டத்தை இழந்தது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம் ஆகும்.
இதைவிட மிகப்பெரிய அவமானம் எப்போதும் இருக்க முடியாது. இந்த போட்டியில் அமெரிக்கா சிறப்பான முறையில் விளையாடியது. அவர்கள் தரவரிசையில் குறைந்த அணியாக ஒருபோதும் செயல்படவில்லை. அவர்கள் பாகிஸ்தானை விட பெரிய அணி போன்றே உணர வைத்தனர். அவர்கள் எங்களை விட சிறந்த முறையில் விளையாடியதால் அவர்கள் தான் வெற்றி பெற தகுதியானவர்கள். இதன் மூலம் எங்கள் கிரிக்கெட்டின் தெளிவான உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. தங்கள் கிரிக்கெட்டை பாகிஸ்தான் அணி எந்த அளவுக்கு மோசமாக முன்னோக்கி எடுத்து செல்கிறது என்பதை இது தெளிவாக காட்டுகிறது.
இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக தோற்றால் கூட பரவாயில்லை. அதேபோன்று அமெரிக்காவுடன் கடைசி வரை நின்று போராடி தோற்றிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இப்படி தோற்றது வெட்கமாக இருக்கிறது. இதில் மிகவும் மோசமானது என்ன என்றால் முதலில் ஆட்டத்தை டிரா செய்துவிட்டு பின்னர் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது தான். இந்த நாளை கடைசி வரை மறக்கவே முடியாது. வீரர்கள் விருப்பு வெறுப்பின்படி தேர்வு செய்யப்பட்டது தான் இதற்கு காரணம். மேலும் கரீபியன் தொடரில் சிறப்பான முறையில் விளையாடிய வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று சாடியுள்ளார்.