மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த மாதம் 24-ஆம் தேதி 3 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை பதிவு செய்வதற்காக திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மூன்று ஏக்கருக்கான மூலப்பத்திரம் தொலைந்ததால் புகார் அடிப்படையில் தேனி காவல் நிலையத்தில் இருந்து பெற்ற சான்றிதழையும் சமர்ப்பித்துள்ளார். அப்போது சார் பதிவாளர் பாண்டியராஜன் என்பவர் அந்த சான்றிதழை சரிபார்த்த பிறகு பதிவு பத்திரம் வழங்கப்படும். தாமதம் ஆகாமல் பத்திரம் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல் நிலைய சான்றிதழின் உண்மை தன்மையை அறிந்த பிறகு பாண்டிய ராஜன் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி  செந்தில்குமார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாண்டியராஜனிடம் கொடுக்க சென்றார். அப்போது பத்திர எழுத்தரான பால மணிகண்டன் என்பவரின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துமாறு பாண்டியராஜன் கூறியுள்ளார். அதன்படி பால மணிகண்டனின் வங்கி கணக்கில் லஞ்ச பணம் டெபாசிட் செய்யப்பட்டது. உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் பாண்டியராஜனையும், பால மணிகண்டனையும் அதிரடியாக கைது செய்தனர்.