
தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் மூன்றாவது மொழி கற்கலாம் ஆனால் ஏழை குழந்தைகள் கற்க கூடாதா என்று ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முன்மொழி கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் எழுதிய கடிதத்தை பார்த்தால் உண்மை நிலை மக்களுக்கு நன்றாக புரியும். தேர்தலுக்காகவும் வாக்கு வங்கிக்காகவும் தவறான கருத்துக்களை மத்திய அரசு பற்றி மாநில அரசு கூறக்கூடாது. மூன்றாவது மொழியை யாரும் படிக்கக்கூடாது என்று தெரிவித்தால் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை கற்க மற்றவர்கள் எப்படி முன் வருவார்கள்.
தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த அரசியல். கட்டாயம் இந்த மொழியை தான் கற்றாக வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் புதிய கல்விக் கொள்கையில் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களுடைய தாய் மொழி தான் அவசியம். தமிழகத்திலும் அப்படிதான். இரண்டாவது மொழி ஆங்கிலம் என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையாது. அதே சமயம் வசதி பெற்றவர்கள் மட்டுமே மூன்றாவது மொழி கற்கக்கூடிய சூழல் உள்ளது. ஏழை மக்களின் குழந்தைகள் மற்றொரு மொழியை கற்க கூடாதா? தங்களுடைய அரசியலை திணிப்பதற்காக மாணவர்கள் விஷயத்தில் தமிழக அரசு விளையாடிக் கொண்டிருப்பது வருத்தமாக உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கம் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மறைப்பதற்காக திமுக அரசு மொழி பிரச்சனையை தற்போது கையில் எடுத்துள்ளது என ஜி கே வாசன் விமர்சித்துள்ளார்.