சேலம் அருகே கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பேண்ட் சட்டை அணிந்து டிக் டாப் வாலிபர் ஒருவர் ஒருவித தயக்கத்துடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை விசாரித்த போது தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகன் மாயமாகிவிட்டதாக புகார் அளிக்க வந்ததாக கூறியுள்ளார். பிறகு அங்கிருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை அவர் அளித்த நிலையில் இது குறித்து விசாரித்த போது அவருக்கு தலை சுற்றலே வந்துவிட்டது. அதாவது மருதமலை திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை நினைவு கூறும் விதமாக அந்த டிப்டாப் நபர் புகார் அளிப்பதற்காக வந்துள்ளார்.

அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சியில் நடிகர் வடிவேலு விசாரிக்கும் போது இவர்தான் என் முதல் கணவர், இவர் எனக்கு முறைப்படி தாலி கட்டிய கணவர் என்று அந்த பெண் பட்டியலிட்டு போவார். அதனைப் போலவே புகார் அளிக்க வந்த நபரிடம் விசாரித்த போது, அவர் டிரைவர் என்பதும் தனது இரண்டாவது மனைவியும் ஐந்து வயது மகனும் மாயமாகி விட்டதாக கூறியுள்ளார்.

இரண்டாவது திருமணம் தானே என்று யோசிக்க தொடங்கினால் காணாமல் போன பெண்ணுக்கு வந்த டிரைவர் மூன்றாவது கணவர். இப்போது அந்த சப் இன்ஸ்பெக்டர் வடிவேலு பாணியில் குழம்பிப் போனார். இருந்தாலும் அந்த டிரைவரின் புகாரை கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண் மற்றும் அவரது மகனை தேடி வருகிறார்கள். தன்னுடைய இரண்டாவது மனைவியை காணவில்லை என்று அந்த பெண்ணின் மூன்றாவது கணவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.