
கர்நாடக மாநிலம் மேடகுட்டா பகுதியில் காசிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஜக்கப்பா கட்டா என்பவர் பூசாரி ஆக இருக்கிறார். இந்த கோவிலுக்கு பக்தர்கள் ஏதேனும் தங்கள் உடலில் வலி ஏற்பட்டால் அது குணமாக வேண்டி வருகிறார்கள். அவர்களுக்கு கட்டா வினோத நேர்த்திகடன் ஒன்று செய்கிறார். அதாவது பக்தர்களைப் படுக்க வைத்து உடலில் எந்த பாகத்தில் வலி இருக்கிறதோ அந்த இடத்தில் கோடாரியால் வெட்டுகிறார். இந்த கோடாரியை கற்பூரம் கலந்த வெந்நீரில் நனைத்தபிறகு வெட்டுகிறார். அதன் பின் மஞ்சள் பொடியை காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டுப்போடுகிறார்.
இதன் மூலம் அவர்களின் வலி சரியாவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் ஒரு வாலிபர் வயிற்று வலியால் செல்லும்போது அவரை சிலர் படுக்க வைத்து கை கால்களை பிடித்து வைத்தனர். பின்னர் கட்டா அவரின் வயிற்றில் கோடாரியால் இருமுறை வெட்டினார். இதில் ரத்தம் பீறிட்டு வந்த நிலையில் பின்னர் மஞ்சள் பொடியை வைத்து கட்டு போடுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பூசாரியை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நரபலியை போன்று இதுவும் ஒரு கொடூரமான விஷயம் என்று கூறி வருகிறார்கள்.