
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக குற்றம்சாட்டி திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
40 நாட்களுக்கு முன்பு கனிஷ்காவுக்கும் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் பிரமாண்டமான திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வை இருட்டுக்கடை அலுவலகம் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து, அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்திருந்தது.
திருமணத்துக்குப் பிறகு வெறும் சில நாட்களிலேயே கனிஷ்காவை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் சொத்துகள், வரதட்சணை, மற்றும் பிரபலமான இருட்டுக்கடை உரிமையை அவர்களிடம் மாற்றித் தரவேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகவும், அதை மறுத்ததால் மிரட்டல் மற்றும் அவமதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு நாள் கனிஷ்காவை அவரது கணவர் மற்றும் மாமனார் காரில் அழைத்துச் சென்று, தாயின் வீட்டில் இறக்கிவிட்டு, சொத்து தொடர்பான ஆவணங்களை எழுதிக் கொண்டு வரும்படி கூறியுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஸ்ரீ கனிஷ்கா சிங் நேரடியாக திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்ததோடு, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளார். வழக்குரைஞர் தரப்பில் கூறப்பட்டதன்படி, இது ஒரு திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறையாகும் என்றும், கனிஷ்காவின் உரிமையை சுரண்ட நினைக்கும் சூழ்ச்சியுடன் அவரது கணவர் குடும்பத்தினர் செயல்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது நெல்லை மாவட்டத்திலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.