தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. முன்னதாக அறிவித்த நேரத்தை விட முன்கூட்டியே ‌ மாநாட்டை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதாவது தற்போது மாநாட்டு திடலில் 90% இருக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில் இன்னும் கட்டுக்கடங்காத கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டி சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. இதன் காரணமாக தற்போது சுங்கச்சாவடி அருகே வாகனங்களை நிறுத்திவிட்டு தொண்டர்கள் கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்கிறார்கள்.

அதன் பிறகு விக்கிரவாண்டி சாலை முழுவதும் வாகனங்களால் ஸ்தம்பித்து விட்ட நிலையில் ஒருபுறம் விசாலை மக்கள் கூட்டத்தால் அலை மோதுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட லட்சக்கணக்கான தொண்டர்கள் முதல் மாநாட்டிற்கு அணிதிரண்டு வருகிறார்கள். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் தற்போது மாநாட்டுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.

நடிகர் விஜய் நேற்று இரவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட்ட நிலையில் தற்போது தான் கேரவனை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் இன்னும் அரை மணி நேரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மாலை 4 மணியளவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து 6 மணியளவில் நடிகர் விஜய் பேசுகிறார்.

தற்போது வெயிலின் காரணமாக தொண்டர்கள் மயக்கம் அடைந்து விடும் நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக அவர்கள் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதன்பிறகு மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறது. அங்கு போதுமான அளவுக்கு தண்ணீர் வசதி இல்லை என்று கூறப்படும் நிலையில் அதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் தற்போது விக்கிரவாண்டி பகுதியை ஒருபுறம் வாகனங்களாலும் ஒருபுறம் தொண்டர்களின் கூட்டங்களாலும் ஸ்தம்பித்து காணப்படுகிறது.