பதினெட்டாவது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கின்றன. இந்த நிலையில் சேப்பாக்கம் எம்.எ சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்களில் மாலை ஐந்து மணி முதல் 11 மணி வரை வாகனம் நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாகன நிறுத்ததற்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அட்டையில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். அனுமதி அட்டை வாங்காத வாகனங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து சென்று மைதானத்தை அடையலாம்.

வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகரப் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கபடாது. பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக சென்று கிரிக்கெட் மைதானத்திற்கு செல்லலாம். விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வாலாஜா சாலையிலிருந்து செல்ல அனுமதி கிடையாது.  ரத்னா கபேவில்  இருந்து காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலையில் திருப்பி விடப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.