
திருப்பூர் மாவட்டம் ரூப்பூரைச் சேர்ந்த குமாருக்கு, அண்மையில் ஒரு பெண்ணுடன் நட்புறவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண் “நான் என் பிரெண்ட் கூட தான் இருக்கேன்… நீங்க வாங்க ஜாலியா இருக்கலாம்” என சலிப்பான குரலில் அழைத்துள்ளார். பெண்ணின் அழைப்புக்கு குமாரும் மயங்கி, “எங்கே வரணும்?” என விலாசத்தை கேட்டதற்கு, சின்னியகவுண்டம்பாளையம் என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
பின்னர், ஆசையால் அங்கு சென்ற குமாருக்கு சோக அனுபவம் காத்திருந்தது. அந்த வீட்டிற்குள் சென்றவுடன் கதவு பூட்டப்பட்டது. உடனே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கத்தியுடன் குமாரை மிரட்டினர். “பணமும் நகையும் தா, இல்லன்னா உயிர் போகும்” என மிரட்ட, அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் செயின், அரை பவுன் மோதிரம் மற்றும் ரூ.3,500 பணத்தை கொடுத்துள்ளார். சம்பவம் நடந்தவுடன் அந்த கும்பல் தப்பிச் சென்றது.
இதுகுறித்து குமார் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, திருச்சி, பல்லடம், ராயர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர். அதில் தேவி என்ற பெண்ணும் உள்ளார். அவர்களிடம் இருந்து கொள்ளை போன நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.