தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் சிறப்பு பண்டிகை நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஜூலை 19 இன்று, ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம்  முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 260 பேருந்துகளும், ஜூலை 20 ஆம் தேதி 585 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைப் போலவே சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இன்று 45 பேருந்துகளும் ஜூலை 20 நாளை 45 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களுக்கு இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தொலைதூரப் பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களுடைய பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.