
கேரள மாநிலம் கோட்டயம் அருகே அயம்குடி மதுரவேலி பகுதியைச் சேர்ந்த ஜோமோன் என்ற 45 வயதான ஆசிரியர், கடந்த 7 ஆண்டுகளாக தன்னைச் சுற்றியுள்ள பொய்யான பாலியல் புகாரால் வாழ்நாளையே சோதனையாகக் கழித்துள்ளார். கோட்டாயத்தில் உள்ள குருபனந்தாரா பகுதியில் ஒரு பாராமெடிக்கல் கல்லூரியை இயக்கிய இவர், 7 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாணவியால் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கினார். பயிற்சிக்காக அழைத்துச் சென்ற போது தவறாக நடந்துகொண்டதாக கூறிய மாணவியின் புகாரின் அடிப்படையில், ஜோமோனை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து அவர் நடத்திய கல்வி நிறுவனம் மூடப்பட்டது. சமூகத்தில் நற்பெயரையும், வாழ்வாதாரத்தையும் இழந்த ஜோமோன், தனது குடும்பத்திற்காக பல்வேறு வேலைகளைச் செய்து கடுமையான ஏழ்மை நிலையை எதிர்கொண்டார். நீதிமன்றத்தில் நீண்டகாலமாக வழக்கை எதிர்த்து போராடிய அவர், தன்னுடைய குற்றமற்ற நிலையை நிரூபிக்க பேரழிவுகளையும் எதிர்கொண்டார்.
இந்நிலையில், அந்த மாணவி திருமணமாகி நலமாக வாழ்ந்து வந்தபோது, ஜோமோனின் தற்போதைய நிலையை அறிந்து மிகுந்த மனவருத்தத்துடன் தனது கணவருடன் அவரை நேரில் சந்தித்தார். “நான் செய்தது தவறு, சிலரின் தூண்டுதலால் அந்த புகாரை அளித்தேன்” என உணர்ச்சி மிக்க வார்த்தைகளுடன் கூறிய மாணவி, ஜோமோனிடம் நேரில் மன்னிப்பு கேட்டார். மேலும், அருகிலுள்ள தேவாலயத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தனது செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.
தற்போது, அந்த மாணவி நீதிமன்றத்தில் அளித்திருந்த புகாரையும் வாபஸ் பெற்றுள்ளார். தனது நன்மதிப்பையும், பணத்தையும், புகழையும் இழந்து, வாழ்க்கையே சிதைந்த நிலையிலும் உண்மையை நிரூபிக்க பாடுபட்ட ஜோமோனின் விடாமுயற்சி பலித்துள்ளது. இந்த சம்பவம் சமூகத்தில் பொய்யான புகாரால் ஒருவரின் வாழ்க்கையே எப்படி அழியக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதைத் தொடர்ந்து சமூகத்தில் உண்மை மற்றும் நியாயம் குறித்து விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.