நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் மசினகுடி தபால் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று வேலை முடிந்து சரஸ்வதி கணவருடன் மோட்டார் சைக்கிளில் பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார்.

பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு யானை வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வந்து கணவன், மனைவி இருவரையும் விரட்டியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குமார் மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டுவிட்டு மனைவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினார். அப்போது நிலைதடுமாறி சரஸ்வதி கீழே விழுந்துவிட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் யானை சரஸ்வதியை தாக்கியது.

இதனையடுத்து ஜீப்பில் வந்த நபர்கள் யானையை விரட்டியடித்து சரஸ்வதியை மீட்டனர். பின்னர் மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரஸ்வதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 9:30 மணிக்கு சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..