
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில் அந்த தொகுதிக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலும் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் முடிந்து விட்டது. ஆனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரி கூறுகையில், தமிழக நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் விக்கிரவாண்டி எம்எல்ஏ மரணம் அடைந்தார். எனவே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது அந்த தொகுதியையும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறவில்லை. ஒரு தொகுதி காலியான பிறகு ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். அந்த தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் உள்ளது. இருந்தாலும் முன்னதாக தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.