
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தொடர்பு இருப்பதை நியூடெல்லி வலியுறுத்தி, சர்வதேச நாடுகளுக்கு ஆவணங்களுடன் ஆதாரங்கள் வழங்கிய நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதல் முறையாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அரசின் கடுமையான நடவடிக்கைகளால் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் அழுத்தத்துக்கு உள்ளான பாகிஸ்தான், தற்போது பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் உள்ள ராணுவ அகாடமியில் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீப், “சமீபத்திய பஹல்காம் நிகழ்வு பழி கூறும் கலாச்சாரத்தின் இன்னொரு எடுத்துக்காட்டாகும்.
இவ்வாறான நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பொறுப்புடன் நடக்கும் நம்பகமான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்” என்று தெரிவித்தார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் ஒருமுறை பயங்கரவாத ஒழிப்பு மற்றும் எல்லை மீறல்களுக்கான விடயங்களில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் நடுநிலை விசாரணை அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இந்தியா இதற்கு என்ன பதில் வழங்கும் என்பது தற்போது உலக நாடுகளின் பார்வையை ஈர்த்து வருகிறது.