நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியில் மற்றவர்களை மதிப்பதில்லை எனவும் அவர் இஷ்டப்படி தான் முடிவுகளை எடுக்கிறார் எனவும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை எனவும் கூறி சமீபத்தில் விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து விலகினர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்களும் விலகினர். இவர்கள் அனைவரும் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன் சீமானுக்கு விஜயை பார்த்து பயம் என்று கூறியுள்ளார். அதாவது நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை பார்த்து சீமான் பயப்படுவதாகவும், நாம் தமிழர் கட்சியில் பிறர் வளர்ச்சி அடைவதை சீமான் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் வேலைகளை சீமான் செய்யவில்லை. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியில் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்திக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் விஜயை தன் தம்பி என்று ஒவ்வொரு முறையும் சீமான் வாய் நிறைய கூப்பிடும் நிலையில் அவருடைய அரசியல் வருகைக்கும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். இப்படி இருக்கையில் சீமான் விஜயின் அரசியல் வருகையை பார்த்து பயப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி சென்றவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் இப்படி ஒரு கருத்தை முன் வைத்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.