
விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் விஜய் மட்டுமல்லாமல் மற்ற கட்சி நிர்வாகிகளும் அனல் பறக்க பேசினார்கள். அதன்படி விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது. மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என ஒரு உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தது. அப்போது விஜய்யிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. உங்களுடைய கொள்கையை தமிழக வெற்றி கழகத்தில் இருந்து தொடங்குங்கள் என்று சொன்னார். நான் ஏன் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்தேன் என்ற பதிவை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
சிறுவயதில் புரட்சியாளர் அம்பேத்கரிடமும் தந்தை பெரியாரிடமும் இணைக்கப்பட்டவன். நான் அந்தக் கொள்கை வழியில் பல்வேறு அரசியல் கட்சிகளில் பணி செய்து அனுபவம் பெற்றிருக்கின்றேன். ஆனால் என்னுடைய ஒரே கேள்வி தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தம் பேசக்கூடிய இந்த 70 வருட அரசியலில் எப்போதும் புரட்சியாளர் அம்பேத்கரை மேடை ஏற்றியது கிடையாது. இரு பெரும் தலைவர்கள் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழக வெற்றி கழகத்தில் ஐந்து பேர் கொள்கை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தன்னுடைய சினிமா என்ற உச்சபட்ச ஒரு பொறுப்பையும் துறந்து இந்த கொள்கை வழியில் நடக்க வேண்டும், புதிய அரசியல் உருவாக்க வேண்டும் என விஜயுடன் சேர்ந்து உரையாடிய போது எந்த அளவிற்கு கொள்கை ரீதியில் தன்னை உள்வாங்கி உள்ளார் என்ற புரிதலோடு என்னை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைத்துக் கொண்டேன் என ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.