
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் பட்டியல்களை தயார் செய்ய வேண்டும் என்று கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பினாமிகளின் விவரங்களை சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஊழல் பட்டியல்களை ஆதாரத்துடன் தயார் செய்ய வேண்டும் எனவும் அதனை ஆளுநரிடம் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் பின்னர் 2026 தேர்தலை முன்னிட்டு மக்கள் மத்தியில் அதனை வைத்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் முன்னதாக தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் ஊழல் பட்டியல்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அண்ணாமலை பாணியில் விஜயின் ஊழல் பட்டியலை தயார் செய்ய அறிவித்துள்ளார். இதற்கு தற்போது இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வரவேற்பு கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்துவதாக விஜய் அறிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு சில கிறிஸ்தவர்கள் மற்றும் நாம் தமிழர் ஓட்டுகள் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் பாஜகவுடன் விஜய் மட்டும் கூட்டணி வைத்தால் அந்த கட்சிக்கு மிகவும் நல்லது. மேலும் பாஜகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக நான் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.