
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை விஜய் தொடங்கியுள்ள நிலையில் அவர் வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தன் கட்சியின் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்த உள்ளார். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் பலர் ஆதரவுகளை தெரிவித்தாலும் பலர் விமர்சனங்களை தெரிவித்து தான் வருகிறார்கள். குறிப்பாக நடிகர் விஜய் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் அவர் வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையாக மாறியதால் அவரை பாஜகவினர் சரமாரியாக விமர்சித்தனர்.
குறிப்பாக தமிழிசை சௌந்தரராஜன் திராவிட கொள்கைகளை விஜய் பின்பற்றுவதாகவும் அதனால் தான் இந்துக்களை புறக்கணிப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தற்போது தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு அரசியல் கட்சி தலைவர் தன்னுடைய தவறினை உணர்ந்து அதனை திருத்திக் கொள்வது ஆரோக்கியமான விஷயம். தற்போதைய சூழ்நிலையில் இந்து மதம் குறித்து யார் எதிர்த்தாலும் கண்டிப்பாக மக்கள் அவர்களை எதிர்ப்பார்கள்.
இந்து மதம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு தரவில்லை எனில் கண்டிப்பாக மக்களும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள். அதை தற்போது விஜய் உணர்ந்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். அதேபோன்று விஜய்யிடமிருந்து தீபாவளி வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம். விஜயிடம் மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலினிடமிருந்தும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவர் வாழ்த்து சொன்னால் நாங்கள் மகிழ்வோம் என்பதற்காக அல்ல. ஏனெனில் அனைத்து தரப்பு மக்களும் அவருக்கு ஓட்டு போட்டுள்ள நிலையில் திமுக கட்சியின் தலைவராக முதல்வராக வாழ்த்து கூறுவது அவருடைய கடமை.
விஜய் எப்படி தன்னுடைய தவறை திருத்திக் கொண்டு வாழ்த்து கூறினாரோ அதேபோன்று முதல்வரும் தான் அவரை திருத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்கள் தீபாவளி பண்டிகையில் வாழ்த்து சொல்லவில்லை எனில் அவர்களுக்கு கண்டிப்பாக எதிர்ப்புகள் கிளம்பும். மேலும் பாஜகவிற்கு உறுப்பினர்கள் சேர்ப்பது தான் எங்களுடைய வேலையை தவிர கூட்டணியை சேர்ப்பது எங்கள் வேலை கிடையாது. அதனை மேலிடம் பார்த்துக் கொள்ளும் என்று கூறினார்.