உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்து விட்டது. மக்கள் 2025 ஆம் ஆண்டு வரவேற்று வருகிறார்கள். புத்தாண்டு பண்டிகைகளும் களைகட்ட தொடங்கிவிட்டது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் புத்தாண்டு பண்டிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு பண்டிகைக்கு வாழ்த்து கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும், எங்குமே நலமே சூழட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ஆங்கில புத்தாண்டுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அதன்படி புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும்,வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம்.

இதேபோன்று தமிழக  வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து பதிவில், மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்கள் நலன் காப்போம். முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகளை பாதுகாப்போம். உண்மையான சமூக நீதியுடன் சமத்துவ தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கூட்டு முயற்சிகளும் மாற்றும் விளைவுகளும் 2024 பல சாதனைகளால் அவை இந்த வீடியோவில் அற்புதமாக சுருக்கப்பட்டுள்ளன. 2025-ல் இன்னும் கடினமாக உழைத்து விக்சத் பாரத் என்ற எங்களின் கனவை நினைவாக்க உறுதி ஏற்போம் என்று பதிவிட்டு ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார்.