உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் உள்ள சரஸ்வா மருத்துவக் கல்லூரி அவசரசிகிச்சை பிரிவில் ஞாயிற்றுக்கிழமை மர்மமான சம்பவம் நிகழ்ந்தது. வாகன விபத்தில் பலத்த காயம் அடைந்த 16 வயது சிறுவன் நவேத், அவசர பிரிவுக்கு கொண்டு வரப்பட்டபோது அவரது நிலை மிக மோசமாக இருந்தது. உடனடியாக டாக்டர்கள் அரவிந்த் பாதக், மயங்க் புருதி மற்றும் ஹர்ஷித் ஆகியோர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிறுவன் மூக்கு மற்றும் காதுகளின் வழியாக இரத்தம் ஓடுவதோடு, பின்னர் இரத்தக் கக்கியதும் சிறுவனின் நிலை கவலைக்கிடமானதாக இருப்பதாக டாக்டர்கள் கூறினார்.

இதைக் கேட்டு சிறுவனின் குடும்பத்தினர் மிகவும் கோபம் அடைந்தனர். இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தினர், சுமார் 25-30 பேர் சேர்ந்து மருத்துவர்களின் விளக்கங்களை ஏற்க மறுத்து, திடீரென ஆத்திரமடைந்தனர். அவர்கள் சிறுவனுக்கு டாக்டர்கள் விரைவில் சிகிச்சை வழங்காததால் தான் இப்படி கவலைக்கிடமான நிலைக்கு மாறிவிட்டதாக கூறி  தவறாக நடந்து கொண்டனர். இதைதொடர்ந்து அவர்கள் நிலைமையை புரிந்து கொள்ளாமல் திடீரென மருத்துவர்கள் குழுவின் மீது தாக்குதல் நடத்தினர். அவசர மருத்துவ அதிகாரி டாக்டர் குஷ் சவுகான் தெரிவித்ததின்படி, உறவினர்கள் நாற்காலிகளை வீசி, மருத்துவ பணியாளர்களை தாக்கினர். மூன்று டாக்டர்கள் கடுமையாக காயமடைந்தனர்; மற்ற டாக்டர்கள் மற்றும் செவிலியர்களும் சிறிது காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

 

 

இந்தக் கொடூர சம்பவம் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதோடு, செல்போனில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உடனடியாக விசாரணை தொடங்கி, டாக்டர் சவுகானின் புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்தனர். மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி கண்டனத்துடன் மீண்டும் பணியில் திரும்பியுள்ளனர்.